மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், உயர்ந்தபண்பாட்டின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. ஆக இன்று உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் நடப்பில் உள்ள மொழிகள் மொத்தம் 6800 என மொழியியல் ஆய்வாளர்கள் கணக்கெடுப்புத் தெரிவிக்கின்றது. இவற்றில் பேசவும் எழுதவும் வல்லமை கொண்ட மொழிகள் எழுநூறுக்கு மேற்பட்டவையாகும். தன் சொந்த வரிவத்தில் எழுதப்படும் மொழிகள் சில நூறு மட்டுமே. இவ்வாறு உலகில் பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்து வந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்கும் மூல மொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அவை முறையே தமிழ், எபிரேய மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருதம், சீனம் என்பனவாகும் இவற்றில் ஏசுநாதர் பேசிய எபிரேய மொழி, சாக்ரடீசு பேசிய(ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி(சமற்கிருதம்) என்பன இன்று வழக்கில் இல்லை. ஆனால் இத்தனை மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமோடு வாழ்ந்து இன்றளவும் சீரிளமைக் குன்றாது சிறப்புற வாழ்கின்ற ஒரே மொழி நமது தமிழ்மொழியே. கன்பூசியஸ் பேசிய சீன மொழியும் பழமையான மொழிகளில் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது.
இன்றைக்கு ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கீரீக், எபிரேய மொழியிலிருந்து உருவான ஈப்ரு, நவீன இலத்தீன், ஆலயங்களில் எஞ்சி இருக்கிற சமற்கிருதம், சீனம் தமிழ் ஆகியவைகளே பழமை மொழிகளாக அங்கீகரிகப்பட்டுள்ளன. இந்தியாவில் சமற்கிருதம் பார்ஸ்சி, அரபி இப்போது தமிழ் செம்மொழிகளாக ஏற்கப்பட்டுள்ளன. இருப்பினும் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே மொழி தான் ஒத்துப் போகிறது. அந்த மொழி நம் தமிழ்மொழி என்று கூறுகிறார் உலகின் மாபெரும் மொழி அறிஞர் மூதறிஞர் நோம் சாம்சுகி கூறுகிறார்.
தமிழ்மொழி இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப்பழமையான மொழி. அது தனித்துவமான இலக்கணம், இலக்கியம் கொண்டது. கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதர் “பெஸ்கி” எனப்படும் வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவேல் மற்றும் எல்லீஸ் ரேணியஸ், பாப்ரீசியர் இராட்லர், வின்சுலோ போன்ற பெருமக்கள் மதம் பரப்புவதற்காகத் தமிழ் படிக்கத் தொடங்கியபோது தமிழின் இனிமை, அதன் இலக்கியச் செழுமை, தனித்துவமான வரலாறு, மரபு சார்ந்த அறிவியல் ஆகியனவற்றைப் படித்து மயங்கி, வியந்து தமிழுக்குப் பெரும் தொண்டாற்றினார்கள். தமிழில் இருந்த தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை குறுந்தொகை, பரிபாடல், திருமந்திரம், திருவாசகம், நாலடியார் போன்ற பழந்தமிழ் நூல்களைப் படித்து வியந்து தமிழின் மீது காதலே கொண்டார்கள்.
தமிழின் இனிமை, தொன்மை, இலக்கணம், உயர்வான இலக்கியம் என்பன அந்த மேல்நாட்டு அறிஞர்களைத் தமிழ்ப்பத்தர்களாக மாற்றியது. இது வரலாற்று உண்மை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல. அது நேசிப்பவர்களை நேசிக்க வைக்கும் மொழி. அதனை அனுபவித்தால் தான் அதன் இனிமை புரியும். எனவே தான் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் அவர்கள் “தமிழுக்கு அமுதென்று பேர் என்றார்” அவர் பிறிதொரு கவிதையில்..
இனிமைத் தமிழ்மொழி எமது- எமக் கின்பம் தரும்படி வாய்த்த நல் அமுது........
என்கிறார். மகாகவி பாரதியாரோ உச்சநிலைக்குச் சென்று
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம் ! என்று பாடுகிறார். அதுமட்டுமல்ல, அதற்கு மேலே போய் ஒரு கட்டளையும் இடுகின்றார்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்பதே அது.
எனவே, தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய ஒவ்வொரு தமிழரும் வினையாற்ற வேண்டும் என்பது நமது அவா
No comments:
Post a Comment