Sunday, August 2, 2009


தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?

No comments:

Post a Comment